நாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணி இணை செயலாளர் பரமேஸ்வரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டசபைக்கு தேர்தல் வர வேண்டும்

மாநில அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. கொலை மற்றும் கொள்ளை தினமும் நடக்கிறது. இதுதொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கவர்னரை சந்தித்து எடுத்துக் கூறினோம். தி.மு.க. ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தி.மு.க.வினரால் தாக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வேண்டும் என்றார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், இளைஞர் பாசறை செயலாளர் ஷாநவாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story