தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில், தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள், பொதுமக்களை பார்க்கையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி. மு.க.வை யாரும் அசைக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. எதிர்க்கட்சியினர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என யாரை வைத்து கட்சியை உடைக்க நினைத்தாலும் அது நடக்காது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

நாட்டை கொள்ளையடித்ததன் மூலம் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை எங்கே பதுக்கி வைப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் என்று தி.மு.க. அமைச்சர் ஒருவரே பேசும் ஆடியோ வைரலாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது அனுமதியில்லாத டாஸ்மாக் பார்கள் மதுபான கடைகளுக்கு இணையாக திறக்கப்பட்டு மதுவிற்பனை அமோகமாக நடக்கிறது. மேலும் சாராய விற்பனையும் களை கட்டுகிறது.

டாஸ்மாக் பார்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு செல்லாமல் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செல்வதாக புகார் பரவலாக உள்ளது. இதேபோல் அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் தி.மு.க.வினர் செயல்படுகின்றனர். இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஆதரவு பெற்றவர்கள் தான், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். அவருக்கு தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுப்பார். இதேபோல் அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

தி.மு.க.வின் கருவூலம்

இதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட பிறகும் அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி நீடிப்பது அமைச்சரவைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும். எனவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் இதுபோன்று அமலாக்கத்துறை மூலம் கைதாகும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யாமல் அவரை காப்பாற்றும் செயல்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு காரணம், தி.மு.க.வின் கருவூலமே அமைச்சர் செந்தில் பாலாஜி தான். இவரை வைத்து தான் தி.மு.க. அனைத்து ஊழல்களிலும் ஈடுபடுகிறது. அதனால் தான், இன்று ஊழல் புகாரில் சிக்கி செந்தில்பாலாஜி கைதாகியுள்ளார்.

செந்தில்பாலாஜியை காப்பாற்ற...

அன்று தனது சகோதரி கனிமொழியை அமலாக்கத்துறை கைது செய்த போது கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதும் பதறி துடிக்கிறார். எச்சரிக்கை வீடியோ வெளியிடுகிறார். இதில் இருந்தே செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயல்கிறார் என்பது தெளிவாகிறது.

இதேபோல் மேலும் சில அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்க உள்ளது. அப்படி நடந்தால், அந்த அமைச்சர்களும் தாங்களாகவே பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரளாக பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயபால், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்ஷா, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

யாரும் நம்ப வேண்டாம்

முடிவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. தி.மு.க. அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.வினரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. அவர்களை சட்டப்படி விடுவிக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவோம். அடக்குமுறையை கையில் எடுக்கும் அரசு அழிவை சந்திக்கும்.

அதே நிலை தான் தி.மு.க.வுக்கும். இரவில் வெளியே செல்ல அச்சப்படும் பெண்களுக்கு உதவி செய்ய போலீஸ் துறை சிறப்பு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். கனிமொழி பேசிய கூட்டத்திலேயே தி.மு.க.வினர் பெண் போலீசை துன்புறுத்தியுள்ளனர். எனவே அரசின் இந்த அறிவிப்பு வெறும் நாடகமே. யாரும் நம்ப வேண்டாம் என்றனர்.


Next Story