கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும்; நிர்வாகிகள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற அனைவரும் உழைக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.
நாகர்கோவில்,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற அனைவரும் உழைக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.
வெற்றிக்காக உழைக்க வேண்டும்
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எப்.எம்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை மேயர் மேரிபிரின்சிலதா, மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர்கள் பூதலிங்கம், கரோலின் ஆலிவர்தாஸ், சோமு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபாரதி, பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், பகுதி செயலாளர்கள் ஷேக்மீரான், ஜவகர், ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசும்போது கூறியதாவது:-
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வேண்டும். தனித்து நின்றாலும் தி.மு.க. வெற்றி பெறும் அளவுக்கு உங்களின் அனைவரது உழைப்பும் இருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளுக்குள் என்ன பிரச்சினை இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றார்.
பொதுக்கூட்டம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நடந்து முடிந்த கட்சியின் 15-வது பொதுத்தேர்தலில் கட்சித் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட, திராவிட மாடல் தத்துவம் மூலமாக தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம், ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக பகுதிகளில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டங்கள், கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந் தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச்சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரியத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங்கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.