கட்டண உயர்வை கண்டித்து சமயபுரம், துவாக்குடி, திருப்பராய்த்துறை சுங்கச்சாவடிகளை தே.மு.தி.க.வினர் முற்றுகை


கட்டண உயர்வை கண்டித்து சமயபுரம், துவாக்குடி, திருப்பராய்த்துறை சுங்கச்சாவடிகளை தே.மு.தி.க.வினர் முற்றுகை
x

கட்டண உயர்வை கண்டித்து சமயபுரம், துவாக்குடி, திருப்பராய்த்துறை சுங்கச்சாவடிகளை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 8 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கட்டண உயர்வை கண்டித்து சமயபுரம், துவாக்குடி, திருப்பராய்த்துறை சுங்கச்சாவடிகளை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 8 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், சதீஷ், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் ஆறுமுகம், துணைச்செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 62 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

துவாக்குடி

இதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க.சார்பில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட அவை தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த துவாக்குடி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து வாழவந்தான்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

திருப்பராய்த்துறை

இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் முக்கொம்பு அருகே உள்ள திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் திராவிடமணி முன்னிலை வகித்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெட்டவாய்த்தலை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதேபோல திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்டசெயலாளரும், மணிகண்டம் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான பாரதிதாசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவை தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான அர்ஜுன், மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் சரவணன், வஜ்ரவேல், நீலமேகம், செயற்குழு உறுப்பினர் முல்லை சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் துரைராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த வையம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற 47 பேரை கைது செய்தனர்.


Next Story