தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர், ஆக.21-
'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதம்
'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரிலும், இளைஞர ்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதம் திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த போராட்டத்தையொட்டி 'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 'நீட்' தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் புகைப்படங்கள் ஆகியவை வீடியோவாக திரையில் திரையிடப்பட்டது. முன்னதாக 'நீட்' தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா படத்திற்கு அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
----