செந்தில்பாலாஜி கைதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்


செந்தில்பாலாஜி கைதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்
x

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கோவை,

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்த காலனியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், 'வருகிற 23-ந் தேதி அடுத்த வியூகத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதை திசை திருப்பவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார்' என்று கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், 'மத்திய மந்திரிகளாக இருக்கும் 33 பேர் மீது வழக்குகள் இருக்கிறது. அவர்கள் மட்டும் பதவியில் தொடரலாமா?. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. இப்படி செய்து வருகிறது. 9 ஆண்டுகளில் பா.ஜ.க. எதுவும் தமிழகத்திற்கு செய்யவில்லை. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முற்படுகிறார். அதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது' என்று கூறினார்.

வைகோ, பாலகிருஷ்ணன்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, 'அமலாக்கத்துறை அடாவடிகள் நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் பழிவாங்க பா.ஜ.க. இதை கையாண்டு வருகிறது. இந்த அணி மத்திய அரசின் அதிகாரத்தை மண்ணோடு மண்ணாக மக்கிபோக செய்யும்' என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், 'தமிழ்நாட்டில் கை வைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம். அதற்கு எடுத்துக்காட்டு 48 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதுதான். 18 மணி நேரம் அமைச்சரை பூட்டி வைத்து விசாரணை செய்ய உங்களுக்கு உரிமை யார் கொடுத்தார்கள்? கவர்னருக்கு என்ன அதிகாரம் என்று அ.தி.மு.க.வினருக்கு தெரியாதா?. பா.ஜ.க.வின் தொங்கு சதையாக அ.தி.மு.க. மாறியுள்ளது' என்று தெரிவித்தார்.

முத்தரசன், திருமாவளவன்

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், 'பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது. அதிகார அத்துமீறல் தொடர்கிறது. அரசியல் அமைப்பின்படி, சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அதிகாரிகள் வெறும் அம்பு தான். அவர்களை ஏவுவது மோடியும், அமித்ஷாவும்தான். ஜனநாயக மரபுகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்' என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 'ராகுல் காந்தியை பிரதமராக மாற்றுவேன் என கூறிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் இருந்து மாறவில்லை. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மோடி அரசு மிரட்டி வருகிறது' என்று தெரிவித்தார்.

காதர் மொய்தீன்

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. உள்பட பலர் பங்கேற்று பேசினர்.


Next Story