பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைவிருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் கைதுகட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்


பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைவிருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் கைதுகட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. கவுன்சிலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்


விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 63). தி.மு.க.வை சேர்ந்த இவர் விருத்தாசலம் நகராட்சியில் 30-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, விருத்தாசலத்தில் மழலையர் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அழுதுகொண்டே வந்த சிறுமி

நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளி இயங்கியது. மாலையில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் அவர்களது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது யு.கே.ஜி. படித்து வரும் 6 வயது மாணவி மட்டும், அழுது கொண்டே அவளது வீட்டுக்கு சென்றாள். மேலும், சிறுமி அணிந்திருந்த உடையில் ரத்தக்கைறகளும் இருந்துள்ளன.

இதை பார்த்த அவரது பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, பள்ளியில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். மகள் பாலியல் கொடுமைக்கு ஆளானதை கேட்டறிந்த பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

பள்ளியில் பாலியல் கொடுமை

தொடர்ந்து, சிறுமியை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி கூறிய பள்ளியில் பெண் ஆசிரியைகள்தான் பணிபுரிகிறார்கள். ஆண்கள் யாரும் பணியாற்றவில்லை.

எனவே போலீசார் தாளாளர் பக்கிரிசாமியின் புகைப்படத்தை காண்பித்து, சிறுமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை பார்த்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு அவர்தான் காரணம் என்று உறுதிபடுத்தினாள்.

கவுன்சிலர் கைது

இதையடுத்து, போலீசார் பக்கிரிசாமியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர், பள்ளியில் இருந்து அழைத்து சென்ற போது ஆட்டோ டிரைவர் அல்லது வேறு யாரேனும் சிறுமிக்கு தொல்லை கொடுத்து இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இருப்பினும் போலீசார், சிறுமி கூறியதன் அடிப்படையில், அவரது பெற்றோரிடம் இருந்து புகாரை பெற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்கிரிசாமியை கைது செய்தனர். பின்னர் கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) உத்தமராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர், பக்கிரிசாமியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் பக்கிரிசாமி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை குறித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தினார்.

கட்சியில் இருந்து நீக்கம்

இதற்கிடையே பக்கிரிசாமியை கட்சியில் இருந்தும் நீக்கி தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி (டிஸ்மிஸ்) வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story