தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்:மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்:மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x

மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை


மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இவைகளுக்கு முழுப்பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் மதுரையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை தந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. நீட் தேர்வை ரத்து செய்வோம், பெட்ரோல் விலையை குறைப்போம். மது விலக்கு கொண்டு வருவோம். இப்படி ஏராளமான அறிவிப்புகளை அறிவித்து மக்களை ஏமாற்றி விட்டது. தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ஏரிகளில் 15 கோடி யூனிட் மணலும், 60 அணைகளில் 21 கோடி யூனிட் மணலும் இருக்கின்றன. இந்த மணலை எடுக்க தமிழக அரசு அனுமதித்து உள்ளது. இதற்காக மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. கொள்ளை அடிப்பதற்காக மணல் குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தமிழகமே வறட்சியாகி பாலைவனமாக மாறி வருகிறது.

இளம் விதவைகள்

தி.மு.க. ஆட்சி எப்போது வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும். கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் தினமும் அரங்கேறி கொண்டு இருக்கும். கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தாராளமாக புழங்கும். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டு 126 பேர், 2007-ம் ஆண்டு 135 பேர், 2008-ல் 101 பேர், 2009-ல் 429 பேர், 2010-ல் 185 பேர், 2011-ம் ஆண்டு 481 பேர் இறந்து உள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் இறப்பு இல்லை. ஆனால் தற்போது மீண்டும் இந்தாண்டு மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவியும், கள்ளச்சாராயம் காய்ச்சிய நபருக்கு ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கி உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டுக்கு சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் இளம்விதவைகள் அதிகமானதற்கு மது தான் காரணம் என்று கனிமொழி முழங்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு கொண்டு வரப்படும். தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகள் அனைத்து மூடப்படும் என்றார். ஆனால் இப்போது மது விலக்கு பற்றி கேள்வி கேட்டால், கனிமொழி பயந்து ஓடுகிறார்.

தி.மு.க.வின் நிர்வாக சீர்கேட்டால் ஸ்டான்லி உள்பட மருத்துவ கல்லூரிகளில் உள்ள 500 இடத்தை இழந்து உள்ளோம். மு.க.ஸ்டாலின், ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருப்பதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளார். அவரது பேச்சு காரணமாகதான் அமலாக்கத்துறையினர் உதயநிதி ஸ்டாலினின் ரூ.35 கோடி அசையா சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story