மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க. அரசு தோல்விகே.பி.ராமலிங்கம் பேட்டி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் உலக தரத்திற்கு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ரெயில் நிலையங்களை ஒரே நேரத்தில் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். தமிழகத்தில் சேலம், கரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசின் எந்த திட்டங்களையும் சரிவர செயல்படுத்தாமல் தி.மு.க. அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண், என் மக்கள் நடைபயணம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கான ஆதரவு பெருகி வருகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடைபயணத்தை மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் ஆன்மிகம், அரசியல் இரண்டையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. முன்னெடுத்து செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்டத் தலைவர் பாஸ்கர், பார்வையாளர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ஐஸ்வர்யம் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலய விவகாரம் தொடர்பாக பென்னாகரம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு தொடர்பாக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.