நீட் தேர்வை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


நீட் தேர்வை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x

நீட் தேர்வை கண்டித்து பாளையங்கோட்டையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருநெல்வேலி

நீட் தேர்வை கண்டித்து பாளையங்கோட்டையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவப் பிரிவு ஆகியவை இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், ''சாதாரண மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியாகும், தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்டும் முதல் தொடக்கம்தான் இந்த போராட்டம், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நமது இந்தியா கூட்டணி வெற்றி பெறும், அப்போது தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கும் அப்போது நீட் தேர்வு அகற்றப்படும். அதுவரை போராட்டம் தொடரும்'' என்றார்.

கனிமொழி எம்.பி.

இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், "நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டம் மாணவர்கள் எழுச்சி போராட்டமாக மக்களின் எழுச்சி போராட்டமாக மாற வேண்டும். நீட் தேர்வில் தேர்வாக முடியாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து தி.மு.க. போராடும்" என்றார்.

கலந்து கொண்டவர்கள்

உண்ணாவிரதத்தில் திருமாவளவன் எம்.பி. அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திக்குமார்,

மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேஸ்வரி, கதிஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், வக்கீல் அணி செல்வ சூடாமணி, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், நித்திய பாலையா, சுந்தர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீரான்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சாகுல் அமீதுஉஸ்மானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் அமைச்சர் மதிவேந்தன் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, தற்போதும் சரி, ஆரம்ப காலத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வை எதிர்ப்பதில், அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்றார்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story