தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை மலர்கள்ளக்குறிச்சியில் அமைச்சர் எ.வ.வேலு இன்று வெளியிடுகிறார்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை மலரை அமைச்சர் எ.வ.வேலு இன்று கள்ளக்குறிச்சியில் வெளியிடுகிறார்.
சாதனை மலர்
தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத்துறைகள் மூலம் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி என்ற சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சாதனை மலரை வெளியிட்டு, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மை நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் 622 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 310 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.