குழுக்களை அமைத்து தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
குழுக்களை அமைத்து தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பல்லடம், செப்.7-
குழுக்களை அமைத்து தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பல்லடத்தில் வரவேற்பு
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்றார். பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
வாக்குறுதிகள்
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 15 அமாவாசைகள் கடந்துவிட்டன. மீதம் 45 அமாவாசைகள் உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குழுக்களை அமைத்து மக்களை ஏமாற்றுகின்ற வேலையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், கியாஸ் சிலிண்டர் வாங்க ரூ.100 மானியம் திட்டம், கல்வி கடன் ரத்து போன்ற பல திட்டங்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை யாவும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
வரி இனங்கள் உயர்வு
பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. மக்கள் பயன்பெறும் வகையில் விலை குறைப்பு செய்யப்படவில்லை. கேட்டால் நிதிநிலை சரியில்லை என்கிறார்கள். மக்கள் பயன்படக்கூடிய எந்தத்திட்டமும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
சொத்து வரியும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் பாதிப்படைந்த மக்கள் தற்போது அதிலிருந்து மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில், அவர்களுக்கு மேலும் சுமை ஏற்படுத்துகின்ற வகையிலே வரி இனங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இது மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.