நிலத்தரகர் கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் விடுதலை
அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்டோரை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
சென்னை,
சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.