பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்


பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
x
தினத்தந்தி 7 Aug 2023 10:24 AM GMT (Updated: 7 Aug 2023 10:56 AM GMT)

பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு அமையும்.

கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது.

தி.மு.க. அரசு விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கும், மு.க.ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story