கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மேலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமையில் மேலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர்
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமையில் மேலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் மேலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் இறந்துள்ளனர். தி.மு.க உடன்பாடு இல்லாமல் இந்த நிகழ்வு நடந்திருக்காது. கள்ளச்சாராயம் சாவு குறித்து சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. அதில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். தற்போது கட்சி ரீதியாக 75 மாவட்டங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
அனுமதி இல்லாத பார்கள்
அனுமதி இல்லாத பார்கள் மூலம் தினந்தோறும் பணம் கரூர் கம்பெனிக்கு சென்றுகொண்டிருக்கிறது. இதுகுறித்து வருமான வரி சோதனை நடத்திய போது அவர்களை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர். ஊழலுக்காகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்றிய தவறியதற்காக இரண்டு முறை தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல் தற்போது கள்ளச் சாராயம் சாவு, போதைப்பொருள் நடமாட்டத்தால் தி.மு.க. ஆட்சி கவிழும் நிலை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.