பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்
பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தையில் கழிப்பிட வசதி
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை தலைவர் கவுதமன்:- அத்தியாவசிய பணிகளுக்கு முன் அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் முன் அனுமதி வாங்கிய எந்த பணிகளும் நடைபெறவில்லை. தண்ணீர் லாரியின் ஆயுள் காலம் முடிந்து விட்டது. இந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் என ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்வதற்கு புதிதாக வாகனம் வாங்கி விடலாம். மாட்டு சந்தை மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே சந்தையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கவுன்சிலர் சாந்தி கிருஷ்ணகுமார்:- வடுகபாளையம் நூலகத்திற்கு போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் வருகின்றனர். ஆனால் கூடுதலாக புத்தகம் வழங்க வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும் புத்தகம் வழங்கவில்லை. மயானத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிலையத்தை இடமாற்ற எதிர்ப்பு
கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா:- பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை திட்டம் வரவேற்கதக்கது. ஆனால் ஒரு பையை ரூ.19.80 விலை கொடுத்து வாங்கி, அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சாத்திய கூறுகள் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதற்கிடையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு ஏன் கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆட்சபணை தெரிவிக்கிறோம்.
கவுன்சிலர் நர்மதா:- நகராட்சியில் தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர். மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை தூய்மை பணியாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்பது குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை கேட்டதற்கு கொடுப்பதாக கூறினீர்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.
கவுன்சிலர் மணிமாலா:- மாட்டு சந்தை பகுதியில் கழிவுநீர் தண்ணீருடன் கலப்பதால் கிணற்று நீர், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற வார்டுகளுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 13-வது வார்டுக்கு எந்த பணிகளும் ஒதுக்குவதில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட வார்டாக உள்ளது. அடுத்த கூட்டத்தில் பணிகள் ஒதுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்.
எந்த வார்டையும் ஒதுக்குவதில்லை
கவுன்சிலர் துரைபாய்:- பஸ் நிலைய பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. இதேபோன்று திரு.வி.க. மார்க்கெட் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் வைஷ்ணவி:- தீரன் சின்னமலை நினைவு நாளை அரசு விழா அனுசரிக்கப்படுகிறது. எனவே பொள்ளாச்சி நகராட்சி சார்பிலும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது உருவபடத்தை வைத்து வழிபாடு நடத்த வேண்டும்.
தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- பொள்ளாச்சியில் என் குப்பை என் பொறுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படுகிறது. பெண்கள் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளில் தரமான நாப்கின் எரித்து அப்புறப்படுத்தும் எந்திரம் பொருத்தப்படும். பொள்ளாச்சி நகரில் 36 வார்டுகளுக்கு 24 பேட்டரி வாகனங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் கூடுதலாக வாகனங்கள் தேவைப்படுவது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. 32-வது வார்டில் பழுதடைந்த சிறு பாலம் தரமான முறையில் விரைவில் கட்டி கொடுக்கப்படும். கவுன்சிலர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் பேசாமல், ஒவ்வொருவராக பேச வேண்டும். எந்த வார்டையும் ஒதுக்கி பணிகள் மேற்கொள்வதில்லை. விடுப்பட்ட வார்டுகளுக்கு அடுத்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் ஒதுக்கப்படும்.
வாக்குவாதம்
முன்னதாக பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அள்ளும் எந்திரம் வாங்குவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் போடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி மற்றும் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தப்புள்ளி கோருவதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆட்சபணை கடிதம் கொடுத்தனர். இதற்கிடையில் 32-வது வார்டில் பழுதடைந்த சிறுபாலத்தை சீரமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் பெருமாள், செந்தில் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஆதரவு கவுன்சிலர்களும் பேசியதால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஆனால் பரபரப்பு ஏற்பட்டது.
-