திமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
சென்னை,
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து, பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக தலைமைக்கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. இன்று கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு, திருநெல்வேலி கிழக்கு-மத்தி, தென்காசி வடக்கு-தெற்கு, விருதுநகர் வடக்கு-தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு-மேற்கு, தேனி வடக்கு-தெற்கு, மதுரை வடக்கு-தெற்கு-மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைக்கழகத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
நாளை நீலகிரி, ஈரோடு வடக்கு-தெற்கு, திருப்பூர் வடக்கு-தெற்கு, கோவை வடக்கு-தெற்கு-மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு-மேற்கு, தருமபுரி கிழக்கு-மேற்கு, நாமக்கல் கிழக்கு-மேற்கு, சேலம் கிழக்கு-மேற்கு-மத்தி, கரூர், திருச்சி வடக்கு -தெற்கு-மத்தி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம். 24-ந் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை வடக்கு-தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை)-தெற்கு, தஞ்சை வடக்கு-தெற்கு-மத்தி, கடலூர் கிழக்கு-மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு-தெற்கு, விழுப்புரம் வடக்கு-மத்தி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.
25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை)-மத்தி-மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு-தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு-தெற்கு, திருவள்ளூர் கிழக்கு-மேற்கு-மத்தி, சென்னை வடக்கு-வடகிழக்கு-கிழக்கு-மேற்கு-தென்மேற்கு-தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.
வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, நகரிய, பகுதி, மாநகரச் செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.