மக்களை மட்டுமின்றி பல்லுயிர்களையும் தி.மு.க. அரசு காக்கும்


மக்களை மட்டுமின்றி பல்லுயிர்களையும் தி.மு.க. அரசு காக்கும்
x

வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதுடன், மக்களை மட்டுமின்றி பல்லுயிர்களையும் தி.மு.க. அரசு காக்கும் என்று ஊட்டி நலத்திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நீலகிரி

ஊட்டி, மே.22-

வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதுடன், மக்களை மட்டுமின்றி பல்லுயிர்களையும் தி.மு.க. அரசு காக்கும் என்று ஊட்டி நலத்திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ரூ.118¾ கோடி திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் உதகை உருவாகி 200-வது ஆண்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.34.3 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.56.36 கோடி செலவில் 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர 9,422 பேருக்கு ரூ.28.13 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ.118.79 கோடியிலான திட்டங்களை நீலகிரி மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர், விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள்

இங்கு கூடி இருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது அரசு விழாவா? அல்லது மாநாடா? என்ற ஒரு எழுச்சியை காணமுடிகிறது. தி.மு.க. ஆட்சி அமையும்போதெல்லாம் நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனவுடன் பஸ்களை நாட்டுடமையாக்கும் திட்டத்தை ஊட்டியிலேதான் தொடங்கி வைத்தார். உதகை ஏரியை 1970-ம் ஆண்டு புதுப்பொலிவுடன் சீரமைத்து தந்தார். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மாளிகை கட்டித்தர நிதி ஒதுக்கீடும் செய்தார். முதுமலை சரணாலயத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசுக்கு சிறப்பு திட்ட அறிக்கை கொடுத்தார்.

மேலும் தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேயிலைதோட்ட கழகத்தையும் தோற்றுவித்தார். 2008-ம் ஆண்டு தேயிலை தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தபோது, அவர்கள் கேட்டதொகை 90 ரூபாய் தான். ஆனால் அதனையும்தாண்டி 102 ரூபாய் வழங்கவும் கருணாநிதி உத்தரவிட்டார். படுகர் இனத்தின் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றியவர் கருணாநிதி. மேலும் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்தபோது தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கினார்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு கடை உரிமை நீட்டிப்பு தந்து அனுமதி வழங்கினேன். மேலும் ஊட்டிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தேன்.

ஓடி வந்து உதவுகிறோம்

இங்கு எப்போது இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் தோள்கொடுப்பான் தோழன் என்பதுபோல் நீலகிரிக்கு ஓடிவரக்கூடிய அரசுதான் தி.மு.க. 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசாவை ஹெலிகாப்டரில் போய் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கருணாநிதி உத்தரவிட்டார். அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த நானும் போர்க்கால மீட்பு பணிக்கு உத்தரவிட்டேன்.

2019-ம் ஆண்டு நீலகிரி நிலச்சரிவு என்பது மிக மோசமானது அதனை கேள்விப்பட்டதும் ஓடிவந்தேன். 2 நாட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, வீடு இழந்தவர்களை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினோம். ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு உதவும் மாபெரும் இயக்கம்தான் தி.மு.க.

உணவு ஏற்றுமதி மையம்

நீலகிரி மாவட்டத்தில் காபி, வாழை என பல்வேறு பழவகைகள், கேரட், பீன்ஸ், வண்ண முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. கூடலூர் பகுதியில் நறுமணப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மையத்தை அமைக்கப்படும். சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உழவர்கள் சிறப்பாக விளைவிக்க அங்கு வளமையம் அமைக்கப்படும்.

நில பிரச்சினை

17 ஏ என்று சொல்லப்படும் நிலங்களில் குடியிருக்கும் முக்கிய பிரச்சினைகளை இங்கு குறிப்பிட்டு சொன்னார்கள். நான் சென்னை சென்றதும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட கலந்தாலோசனை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்த முதல்முறையாக ஊட்டி, குந்தா, கோத்தகிரி அடங்கிய நீலகிரி பிளான்ட் ஏரியா அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தை பாதுகாப்பது என்பது தமிழகத்தின் இயற்கையை பாதுகாப்பதற்கு சமமாகும்.

33 சதவீதம் வனப்பகுதி

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இயற்கையும், மனிதனும் நெருங்கி வாழக்கூடிய இந்த வனப்பரப்பு மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள வனப்பரப்பை காக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழக வனப்பரப்பு 20.27 சதவீதத்தில் இருந்து 33 சதவீதம் உயர்த்த நீண்டகால திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளோம். வனஉயிர்களை காப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

யானைகளுக்கு அதிநவீன பாதுகாப்பு மையம்

முதுமலையில் உள்ள புலிகளை காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் யானைகள் காப்பகத்தில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் ஏற்படுத்தப்படும். தெப்பக்காடு யானைகள் முகாம் நூற்றாண்டு பழமையானது. ஆசியாவில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது. இங்கு யானைகள் அதிக தகவல்கள் ஆய்வாளர்களால் சேகரிக்கப்படுகிறது. அறிவியல் பூர்வமையமாக விளங்கி வருகிறது. காட்டு விலங்குகளை பழக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வனப்பகுதியில் அன்னிய களை செடிகள் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அன்னிய தாவரங்களை அகற்ற ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்லுயிர் காப்போம்

தமிழகத்தின் வனத்தையும், மலையும், மலைச்சார்ந்த இடங்களையும், மலைகளுடன் சேர்ந்து வாழும் இந்த மக்களையும் தி.மு.க. அரசு காக்கும். சுற்றுச்சூழலையும், அனைத்து உயிர்களையும் உள்ளடக்கி பல்லுயிர்களை காக்கும் அரசாக தி.மு.க. செயல்படும். வளர்ச்சி என்பது அனைத்து உயிர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். எந்த உயிர்களையும் பாதிக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் அறநெறியை ஆட்சி நெறியாக கொண்டிருக்க கூடிய இந்த அரசு திராவிட மாடல் என்று சொல்வதற்கும் அனைத்துவிதமான தத்துவங்களும் உள்ளடக்கி உள்ளது. சுயமரியாதைகாரன் என்றால் இயற்கை மனிதன் என்று பொருள் என தந்தை பெரியார் கூறினார். அதுபோல இயற்கையை எந்நாளும் பாதுகாக்கக்கூடிய கூடிய அரசாக தி.மு.க. செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆ.ராசா எம்.பி., கணேஷ் எம்.எல்.ஏ. கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் பா.மு.முபாரக், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள 200 ஆண்டு பழமையான கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும் கல்லூரி பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.


Next Story