10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால் தமிழகத்தல் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது.
இந்த நிலையில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கு நிலுவையில் இருந்தபோது ஆலோசிக்காமல், தீர்ப்புக்கு பின் கட்சிகளை அழைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பு உள்ளார்.
இதனால் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.