ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குவதே தி.மு.க. தான்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குவதே தி.மு.க. தான்:   எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x

ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குவதே தி.மு.க. தான் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.

கரூர்

பொதுக்கூட்டம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலாயுதம்பாளையம் மாலைவீதி ரவுண்டானாவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். புகழூர் நகரச் செயலாளர் விவேகானந்தன் வரவேற்று பேசினார்.

குற்றச்சாட்டு

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்ேபாது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்துபோன துரோகிகள் ஓட்டை பிரித்ததால் 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தோற்று விட்டோம். அதனை நிரூபிக்கும் விதமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கருணாநிதி புகழ் பாடுகிறார். இன்று அவரை இயக்குவதே தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கின்றனர். இதற்கெல்லாம் திருப்பி பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story