தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை-டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று நெல்லையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
"தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை" என்று நெல்லையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெங்கின்ஸ், இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நெல்லை பரமசிவன் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிலம் கையகப்படுத்துதல்
50 ஆண்டுகளாக இருக்கும் கட்சிகளுடன் போட்டியிட்டு அ.ம.மு.க. கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கிளை கழகங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களை அரசு தன்னிச்சையாக கையகப்படுத்தி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டு நீதிபதியும் கண்கலங்கி பேசிஉள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி என்ன ஆக போகிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
நாளை ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து கோடநாடு வழக்கு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்களையும், பின்னணியில் இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதல்-அமைச்சரான உடன் விடியல் ஆட்சி தருவோம் என சொல்லிவிட்டு விடியா ஆட்சி நடத்தி வருகிறார்.
தீர்மானிக்கும் சக்தி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியையும், சின்னத்தையும் வைத்துக்கொண்டு தொண்டர்களை ஏமாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும். தேர்தலில் நமது வெற்றி கணக்கை தொடங்க அனைவரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. இல்லை என்றால், யாராலும் வெற்றியை பெற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அ.ம.மு.க.வும், ஓ.பன்னீர்செல்வமும் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.