நகர செயல்வீரர்கள் கூட்டம்:அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தி.மு.க.வினர் வாக்குவாதம்திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனத்தில் நடந்த நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
வாக்குவாதம்
திண்டிவனத்தில் நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளரும், ஆசிரியருமான கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும், வரும் நாடாளுமன்றதேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகர செயலாளர் வெண்ணிலா கபிலன் உள்ளிட்ட சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ள தங்களுக்கு முறையாக அழைப்பு வரவில்லை என கூறி அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிருப்தி
மேலும் வெண்ணிலா கபிலன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஒரு சில கட்சியினர் 30, 40 ஆண்டுகள் கட்சியில் உழைத்த எங்களுக்கு எந்ந நல்லதும் நடக்கவில்லை. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் எங்களை போன்ற பலர் அதிருப்தியில் உள்ளனர் என்றனர். மேலும் நகரமன்ற கவுன்சிலர்கள் சிலர் எங்கள் பகுதியில் கடந்த 2 வருடமாக வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைகேட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூட்டத்தில் பேசுகையில், இது நகர செயல்வீரர்கள் முன்னோட்ட கூட்டமாகும். இந்த கூட்டத்துக்கு நகர நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் உழைத்த அனைவருக்கும் பலன் இல்லாமல் போகாது என்றார். மேலும் இந்த கூட்டத்தில் அரசு பணி டெண்டர்கள் எடுப்பது குறித்தும், மற்ற கட்சிக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும் விவாதம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராம்குமார், சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.