தி.மு.க. அமைச்சர்கள் மீதான2-வது ஊழல் பட்டியல்
தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அறப்போர் இயக்கம்
டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் புதிய இந்தியா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மின்சார துறை மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல் நடந்து உள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்து உள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக கவர்னர் மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டிற்கு அவர் அறிக்கை மூலம் பதில் அளித்து உள்ளார். அ.தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு அசல் ஆவணங்கள் வைக்கப்படவில்லை. மேலும் பல ஆவணங்கள் இல்லாமல் உள்ளது. அப்படி இருக்கும் போது கவர்னர் எப்படி விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியும்.
ஆர்.எஸ்.பாரதி பேச்சு
தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசும் பேச்சுக்கும், வயதிற்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணா மலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என்று அவர் கூறி உள்ளார். அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும். எனவே ஆர்.எஸ்.பாரதி தமிழகத்தில் பயமுறுத்தி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் எங்களிடம் நடக்காது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்.பி.க்களை பெற்று மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. மத்திய அரசின் திட்டத்தால் தான் தமிழ்நாடு எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தது.
புதிய தொழில் நிறுவனங்கள் ஒசூரை சுற்றியே அமைகின்றன. தமிழகத்தின் உள்பகுதிக்குள் வர தயங்குகின்றன. இந்த நிறுவனங் களை நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கு கொண்டு வருவதில்தான் வெற்றி உள்ளது.
கோவையின் பொறுப்பு அமைச்சர்
சுப்பிரமணியசாமியை இதுவரை நான் சென்று பார்த்தது இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை. யார் ஆசீர்வாதமும் எனக்கு தேவையில்லை. கோவையின் பொறுப்பு அமைச்சராக முத்துச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் கோவையின் வளர்ச்சிக்கு செயல்படுவார்.
முன்பு அண்ணாமலையை அழைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவ னங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இனி அவ்வாறு நடக்காது என்று நினைக்கிறேன். கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமர் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளனர். தமிழர் நலனில் கை வைத்தால் எந்த எல்லைக்கும் போவோம் என தி.மு.க. உறுதியாக தெரிவிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் பயணம் செய்கிறோம். சுமுகமாக போகிறோம்.
ஊழல் பட்டியல்
தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவை யில் விரைவில் வெளியிடப்படும். எல்நினோ காரணமாக பருவ மழை குறைந்துள்ள நிலையில், காவிரி தண்ணீரும் வரவில்லை என்றால் என்னாவது. தமிழக அரசுதான் காவிரியை கொண்டு வர வேண்டும். வானதி சீனிவாசன் மீதான தனிப்பட்ட வன்மத்தை தி.மு.க.வினர் வெளிப்படுத்துகின்றனர். இதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.