கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் கரூர் 80 அடி சாலையில் இருந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா வரை அமைதி பேரணி சென்றனர். தொடர்ந்து அங்குள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மனோகரா கார்னர் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், எஸ்.பி.கனகராஜ், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, சுப்பிரமணி உள்பட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.