தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது-ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. குற்றச்சாட்டு


தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்பற்றாக்குறை    மாநிலமாக மாறி விட்டது-ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x

திருமண உதவி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் இ்ல்லை. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது என்று ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

திருமண உதவி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் இ்ல்லை. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது என்று ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். மகளிரணி மாநில இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், துணை செயலாளர் பாலாமணிமாரி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆனிமுத்து, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ரெத்தினம், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர், டாக்டர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில நிர்வாகி கீர்த்திகா, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் பேசியபோது தெரிவித்ததாவது:-

மின்பற்றாக்குறை மாநிலம்

அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இப்போது தி.மு.க. ஆட்சியில் மின் பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஏற்கனவே இருமடங்கு சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஏழை மக்களை பாதிக்க கூடியது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. எதையுமே செய்யவில்லை. செயல்படாத அரசாக உள்ளது. குடும்ப நலனுக்காக ஆட்சி நடக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. கல்விக்கடன், நகைக்கடன், நீட் தேர்வு எதுவுமே ரத்து செய்யப்படவில்லை. திருமண உதவி, தாலிக்கு தங்கம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்து உள்ளனர். இது மக்களுக்கு எதிரான அரசாக உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story