தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருகிறது


தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருகிறது
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருவதாக திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கூறினார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ.நகர், சைலோம், கீழையூர், மேலவீதி, மார்க்கெட் தெரு மற்றும் சந்தப்பேட்டை உள்ளிட்ட 7 இடங்களில் பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான டி.என்.முருகன் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, கவுன்சிலர்கள் புவனேஸ்வரிராஜா, அர்ச்சனாயுகேஷ், ஐ.ஆர்.கோவிந்தராஜன், கோல்ட்.ரவிக்குமார், கலையரசிதங்கராஜ் மற்றும் கந்தன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

வளர்ச்சிபாதையை நோக்கி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை அரசாக திகழ்ந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் 100 சதவீதம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இதர வளர்ச்சி பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதையும் மீறி குறைகள் இருந்தால் அதை நாளை (அதாவது இன்று) முதல் தி.மு.க.வினர் வீடு தோறும் நேரில் வந்து உங்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை மனுவாக பெறுவார்கள். என்னிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள், தி.மு.க.வினர் பெறுகின்ற மனுக்கள் ஆகியவற்றின் மீது மாவட்ட கலெக்டர் மூலம் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பித்திடுங்கள்

வீடு தேடி வரும் தி.மு.க. நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல்களையும் சரி பார்ப்பார்கள். புதிய வாக்காளர்களை பட்டியலில் பெயர் சோ்த்தல், திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் அதை உ்டனடியாக செய்து விடுங்கள். தி.மு.க. உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராவதற்கும் விண்ணப்பித்திடுங்கள். ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டி இருந்தாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், நகர வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. நகர அவைத்தலைவர் டி.குணா நன்றி கூறினார். முன்னதாக பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் பொன்முடியை திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா வரவேற்றார்.


Next Story