தி.மு.க. ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை


தி.மு.க. ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x

தி.மு.க. ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப்பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.

இதை பலமுறை சுட்டிக்காட்டியும், முதல்-அமைச்சரோ, மூத்த அதிகாரிகளோ, காவல் துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

சமூகவிரோத சக்திகளும், கொடுஞ்செயல் புரிவோரும் தி.மு.க. ஆட்சி தங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கியதுபோல் பல்வேறு குற்றங்களை புரிந்து, மக்களை மிரட்டி வருகிறார்கள். சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை.

பாதுகாப்பு இல்லை

தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை. சிறையில் உள்ள ஒருசில கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை. கைதிகளை திருத்தப்போராடும் நேர்மையான காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை.

அதே நேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதுகாப்போடு இருந்தார்கள். தற்போது பட்டப்பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் அமைதிப்பூங்காவாய் திகழ்ந்த தமிழகம், தி.மு.க. ஆட்சியில் அழிவு பாதைக்கே சென்றுவிட்டது. "தி.மு.க. ஆட்சி என்று அகற்றப்படுமோ அன்றுதான் எங்களுக்கு முழு சுதந்திரம்" என்று தமிழக மக்கள் அலறல் எழுப்புவது, இந்த ஆட்சியாளர்களின் காதுகளில் விழாதது ஆச்சரியமே.

காதில் விழவில்லை

முதல்-அமைச்சரின் காதுகளில், அவரை பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையோ? மக்களை காக்க திறமையில்லாமல், மக்களை பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத்தவறிய ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால், தி.மு.க. அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அ.தி.மு.க. ஈடுபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story