'தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம்' சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேச்சு


தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம் சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 19 Oct 2023 1:28 AM IST (Updated: 19 Oct 2023 1:29 AM IST)
t-max-icont-min-icon

'தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம்' என்று சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேசினாா்

ஈரோடு

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம் என்று சத்தியமங்கலத்தில் அண்ணாமலை பேசினார்.

நடைபயணம்

தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் சத்தியமங்கலம் வந்தார். பின்னர் கோட்டூர்பாளையத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்து சென்றனர்.

கடைவீதி வழியாக சென்ற நடைபயணம் ரங்கசமுத்திரம் வந்து சேர்ந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது கூறியதாவது:-

லஞ்சத்தை அகற்ற வேண்டும்

இது மக்களாட்சி நடைபயணம். கையாலாகாத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் நடைபயணம் வந்திருக்கிறோம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் ஏழை சாதி இருக்கக் கூடாது என நாம் கூறுகிறோம். 30 ஆண்டு கால லஞ்சத்தை வருகிற நாடாளுமன்ற தேர்தல் மூலம் அகற்ற வேண்டும்.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்தது பிரதமர் மோடி அரசு. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மற்றும் காப்பீட்டு திட்டம் வழங்கியது பிரதமர் மோடி அரசு. குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மோடி. ஆனால் நமக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்பதைத்தான் தி.மு.க.வினர் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஊழல் புகார்

தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் பால் விலை உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இப்படி எதைப் பார்த்தாலும் உயர்ந்து கொண்டே தான் போகிறது. கோபாலபுரத்தின் குடும்ப ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் பிரதமர் மோடி தான் சரியான வழிகாட்டி. இந்தியாவை பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறார். ஆகவே நாம் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவு அளித்து நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்யவேண்டும். நாமும், நாடும் பயன் பெற செயலாற்றுவோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து நேற்று இரவு கோபிக்கு சென்ற பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அங்கு நடைபயணத்தை மேற்கொண்டார்.


Next Story