நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் துருகம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தமிழக முழுவதும் தி.மு.க.வின் தலைவர், பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள் என அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 22 அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். தற்போது மாவட்ட வாரியாக 22 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து பரிந்துரை செய்ய வேண்டும்.
தீவிரமாக செயல்பட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாவட்டம் மாபெரும் வெற்றி பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக வரும். ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் பூத் கமிட்டி அமைத்து 100 பேருக்கு ஒருவர் என ஆயிரம் பேருக்கு 10 பேர் அமைத்து கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.