'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சி

உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி ரெயில்வே ஜங்ஷன் எதிரில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் 'நீட்' தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி சிவா எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. 'நீட்' தேர்வு தனியார் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளது. பணம் படைத்தவர்கள் மட்டுமே 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவு கனவாகவே இருக்கிறது. எனவே 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்றுள்ளோம். ஆனால் அந்த கோப்புகளில் இன்று வரை ஜனாதிபதி கையெழுத்து இடவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே சேர்த்து தான் 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார், என்றார்.

ரத்து செய்ய வேண்டும்

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும், அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. அரசு பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக கவர்னரை நேரில் சந்தித்து மனுக்களும் கொடுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கவர்னர் எதற்கும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். தமிழக கவர்னர் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். மத்தியில் தி.மு.க. கூட்டணி, இந்திய கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் தமிழ்நாட்டில் நிச்சயமாக 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும், என்றார்.

போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story