வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

விதை வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
நடப்பு காரீப் பருவத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கம்பு, சோளம், தீவனச்சோளம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். இதற்கான விதைகளை விவசாயிகள், விதை வணிக உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப்பட்டியலை உரிய படிவத்தில் குவியல் எண் குறிப்பிட்டுத்தருமாறு கோரி பெற வேண்டும். பின்னாளில் விதைகளின் தரம் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் எழும்நிலையில் விற்பனைப்பட்டியல் மூலம் தீர்வு காண ஏதுவாகும்.
மானாவாரி பட்டத்தில் விதைப்பதற்கு முன் மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பின்னர் விதை விதைக்கும் பணியை தொடங்க வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாத நிலையில் தரமான விதைகளாக இருப்பினும் அவற்றின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கம்பு முதலான சிறுதானிய பயிர்களுக்கு போதுமான உழவு மற்றும் ஈரப்பதம் உறுதி செய்யப்பட வேண்டும்.
அறிவுரை
விதை வணிக உரிமம் பெறாத தனிநபர்கள், நிறுவனங்களிடமிருந்து விதைகளை வாங்கக்கூடாது என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து மேலும் விவரம் பெற அந்தந்த பகுதி விதை ஆய்வாளர்களை அணுகலாம்.
விழுப்புரம் விதை ஆய்வாளர்- 7904367801, கடலூர் விதை ஆய்வாளர்- 7904581956, விருத்தாசலம் விதை ஆய்வாளர்-9500467962, கள்ளக்குறிச்சி விதை ஆய்வாளர்- 9047298886, விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர்- 9443538502 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் தொிவித்துள்ளாா்.






