'நயவஞ்சகர்களின் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்'


நயவஞ்சகர்களின் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்
x

கடன் செயலிகள் மூலம் மோசடி அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற நயவஞ்சகர்களின் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று தேனி போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

தேனி

கடன் செயலி மூலம் மோசடி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரையை சேர்ந்த ராஜேஷ்குமார் தேனியில் புத்தகக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு உடனடி கடன் வழங்கும் செயலி மூலம் கடன் வாங்கினார். அவர் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய போதும், அந்த பணம் வரவில்லை என்று கூறி செயலி நிர்வாகத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அதன்பிறகு வட்டியுடன் மீண்டும் பணம் செலுத்திய போதிலும், அந்த கும்பல் அவருடைய செல்போன் எண்ணுக்கு அவருடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர். மேலும் அவருடைய செல்போனில் சேமித்து வைத்து இருந்த நபர்களின் வாட்ஸ்-அப் புகைப்படங்களையும் மார்பிங் செய்து அனுப்பி மிரட்டினர்.

இதுகுறித்து ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், தேனி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மராட்டிய மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். இந்த கும்பலில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மாட்டிக்கொள்ள வேண்டாம்

தற்போதைய கால கட்டத்தில் எந்தவொரு வரையறையும் இல்லாமல் இதுபோன்ற உடனடி கடன் வழங்கும் செல்போன் செயலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உடனடி கடன் செயலிகள் மூலம் பணத்தை பெறும் பொதுமக்களை, அவற்றை நிர்வகிக்கும் நபர்கள் கடன் தொகையை விடவும் அதிகமாக பணம் பெறுவதற்காக மார்பிங் செய்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற நயவஞ்சகர்களின் கையில் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற செயலிகளை தவிர்க்க வேண்டும். யாருக்காவது இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் உடனடியாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story