பேஷன் டெக்னாலஜி மைய இயக்குனருக்கு எதிரான வன்கொடுமை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக்கூடாது


பேஷன் டெக்னாலஜி மைய இயக்குனருக்கு எதிரான வன்கொடுமை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக்கூடாது
x

தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி மையத்தின் இயக்குனருக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என தரமணி போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சென்னை தரமணியில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி மையத்தில் (நிப்ட்) கடந்த 2013-ம் ஆண்டு முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் இளஞ்செழியன்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கட்டிடப்பிரிவு உதவி இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, சாதி அடிப்படையில் தன்னை பணியிடமாற்றம் செய்து, பாரபட்சமாக நடத்துவதாக தரமணி போலீசில் இளஞ்செழியன் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் தேசிய பேஷன் டெக்னாலஜி மையத்தின் சென்னை வளாக இயக்குனர் அனிதா மாபெல் மனோகர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா மாபெல் மனோகர் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

டெல்லி தலைமையக கண்காணிப்பு பிரிவு கடிதத்தின் அடிப்படையிலும், தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் அடிப்படையிலுமே இளஞ்செழியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. நிறுவன நலன் கருதி எடுக்கப்படும் நிர்வாக முடிவுகளை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றமாக கருத முடியாது. எனவே, என் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் வி.செல்வராஜ் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, 'போலீசார் வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக்கூடாது. மனுதாரரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது. இந்த மனுவுக்கு போலீசார் வருகிற ஜூன் 22-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


Next Story