இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

இன்புளுவென்சா காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

"முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான அவசியம் இல்லை. பெரியவர்கள், குழந்தைகள் என்று ஒட்டுமொத்த பாதிப்பு 1,044 ஆக உள்ளது. இந்த 1,044 பாதிப்பு என்பது கடந்த ஆண்டுகளில் இந்த மாதங்களில் எவ்வளவு இருக்குமோ அதே தான் உள்ளது. பதற்றம் அடைய வேண்டிய சூழல் இல்லை.

எனவே இதற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் 365 நாட்களும் குழந்தைகள் படிக்காமல் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் வந்து விடும். எனவே தலைவர்கள் அறிக்கைகள் விடும்போது நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து, அறிக்கை விட வேண்டும். அதன் பாதிப்புகளை வைத்து பேட்டிகளின் மூலம் அறிக்கைகளின் மூலம் மக்களை பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.


Next Story