தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பதா? எச்.ராஜா கண்டனம்
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார்.
எச்.ராஜா பேட்டி
தேனி அருகே வீரபாண்டியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக போலீஸ் துறை யாருடைய உத்தரவின்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. 6-ந்தேதி (நாளை) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு 3 முறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 3 இடங்கள் தவிர மற்ற இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக திருமாவளவன், சீமான் நடத்திய மனித சங்கிலிக்கு அனுமதி கொடுத்த தமிழக போலீஸ் துறை, இதற்கு அனுமதி மறுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கொடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோர்ட்டு உத்தரவையும் மீறி தமிழக போலீஸ் துறையும், டி.ஜி.பி.யும். செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறது. அ.தி.மு.க.வில் பிளவு இருப்பது உள்கட்சி பிரச்சினை. நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்.
கோமாளித்தனமான கருத்து
கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்து உத்தரவிடுகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதே பொருந்தாத நிலைப்பாடு. சி.பி.ஐ. விசாரணைக்கு கொடுப்பதற்கு தான் மாநில அரசின் பரிந்துரை தேவை. என்.ஐ.ஏ.வுக்கு வழக்கை கொடுக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை. என்.ஐ.ஏ. விசாரணை சரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
கவர்னரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உண்டு. தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது கோமாளித்தனமான கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் தமிழர் அல்ல
தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது குறித்து எச்.ராஜாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "டெல்லி, மும்பை, பெங்களூருவில் உள்ள தமிழர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்று அங்கே சொல்வார்களா? இதுதான் பிரிவினைவாதம். சீமானே தமிழர் இல்லை. வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்.
சீமான் கோமாளித்தனத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பெங்களூருவில் 30 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலையை படுதாபோட்டு கட்டி வைத்து இருந்தார்கள். எடியூரப்பா பா.ஜ.க.வின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றவுடன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது" என்றார்.
பேட்டியின்போது பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.