திருச்சியில் தெருநாயை சுட்டுக் கொன்ற டாக்டர் கைது


திருச்சியில் தெருநாயை சுட்டுக் கொன்ற டாக்டர் கைது
x

திருச்சியில் தெருநாயை சுட்டுக் கொன்ற டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

நாயை சுட்டுக் கொன்றார்

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 26). இவர் கடந்த 21-ந்தேதி இரவு காஜாப்பேட்டை ஆலம்தெரு பிரிவுரோட்டில் நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டுக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் கிளம்பியபோது, அதேபகுதியை சேர்ந்த ஒரு நபர் திடீரென நாயை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு பழனியப்பன் நாயை சுட்டுக் கொன்றது யார்? என பார்த்தார்.

துப்பாக்கி பறிமுதல்

அப்போது அந்த பகுதியில் வசிக்கும் யுனானி மருத்துவரான சையது அசேன் (46) என்பவர் தெரு நாயை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம், நாயை ஏன் சுட்டுக் கொன்றீர்கள் என்று பிரபு கேட்டுள்ளார். உடனே சையது அசேன் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு நேற்று முன்தினம் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், "சையது அசேன் தெரு நாயை சுட்டுக் கொன்றதாகவும், மேலும் அவர் புறா மற்றும் இதர பிராணிகளை அவ்வப்போது விஷம் வைத்து கொல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததாகவும்" கூறி இருந்தார்.

புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சையது அசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக தெருநாய்கள் சுற்றித்திரிந்ததால் அவர் நாயை சுட்டுக்கொன்றதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story