குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம்


குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 7:00 PM GMT (Updated: 9 Aug 2023 7:00 PM GMT)

பெண் டாக்டரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

குன்னூர்

பெண் டாக்டரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டரை தாக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு லாலி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையே கடந்த 5-ந் தேதி தனியார் பள்ளி மாணவர் ஒருவரை, ஆசிரியர் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அப்போது 3 பேர் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரின் உத்தரவை மீறி, சிகிச்சை பெறும் அறையில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதை பெண் டாக்டர் தட்டி கேட்டு உள்ளார். அப்போது ஒருவர் டாக்டரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள், ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக குன்னூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

போராட்டம்

இந்தநிலையில் பெண் டாக்டரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை கண்டித்தும் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஊழியர்கள், டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டாக்டர்கள், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர்கள், ஊழியர்கள் பெண் டாக்டரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். போராட்டம் காரணமாக 3 மணி நேரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமம் அடைந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story