காசி மீதான பாலியல் வழக்கில் டாக்டர்கள் கோர்ட்டில் சாட்சியம்
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதாக காசி மீதான பாலியல் வழக்கில் டாக்டர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
நாகர்கோவில்:
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதாக காசி மீதான பாலியல் வழக்கில் டாக்டர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
பாலியல் புகார்
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அந்த புகாரில் இளம்பெண்கள் கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த புகார்கள் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த வகையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன. அப்போது காசிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய நண்பர் ஒருவரை கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு தடயங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியனும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் காசி மற்றும் அவருடைய தந்தை தங்க பாண்டியன் ஆகியோர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
டாக்டர்கள் சாட்சியம்
இந்தநிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது காசி மற்றும் அவருடைய தந்தை தங்க பாண்டியன் ஆகியோரை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் இதுவரை 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று டாக்டர்கள் வந்து சாட்சியம் அளித்தனர். மேலும் காசி மற்றும் தங்க பாண்டியனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.