தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நிற்க பாஜகவுக்கு வேட்பாளர்கள் இருக்கா? - சீமான் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்-மந்திரி காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு சிலிண்டர் விலை ரூ.200-ஐ குறைத்துள்ளது. இது மக்கள் மீதான அக்கறை இல்லை. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கவில்லை. மக்களின் மீது அக்கறை உள்ள அரசு இவ்வாறு செய்யாது. மக்களின் நலன் சார்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை நாடாளுமன்ற தேர்தலுக்காக குறைக்கின்றனர். மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். ரக்ஷா பந்தனை தவிர வேறு பண்டிகையே இல்லையா?
நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா? அப்படி நின்றாலும் அ.தி.மு.க. நிற்க விடுமா? எங்கே சுற்றினாலும் அ.தி.மு.க. அலுவலகத்தில் தான் நிற்க வேண்டும். அவர்கள் 6 முதல் 7 சீட்டுகள் தான் ஒதுக்குவார்கள்.
சந்திரயான்-3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பெயர் பலகை கூட அவர்கள் வைக்கட்டும். அங்கேயும் சென்று ராமர் கோவில் கட்டட்டும். ஒரு கிரகத்தை அழித்து விட்டனர். அடுத்த கிரகத்தை அழிக்க தயாராகி விட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்-மந்திரி காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் தமிழ்நாட்டின் பெருமை. கலைகளின் அடையாளம். தமிழக அரசுக்கு மாணவர்கள், மீனவர்கள் மீது திடீர் அக்கறை வருகிறது. அதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தல் தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனித்து தான் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.