கரூர் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா?


கரூர் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா?
x

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளை போல இந்தாண்டும் சராசரி மழையை விட கூடுதலாக மழை பெய்யுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர்

சராசரி மழையளவு

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழை ஜனவரி, பிப்ரவரி மாத குளிர்காலத்தில் 16.8 மில்லி மீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதம் ஆகிய கோடை காலத்தில் 109.5 மில்லி மீட்டரும், ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 238.4 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என இந்த நான்கு சீசன்களிலும் சராசரியாக பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழை அளவை எட்ட உதவியாக இருந்து வருகிறது.

12 ஆண்டுகள்

கடந்த 12 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரங்கள் பின்வருமாறு:- 2011-ம் ஆண்டில் 723.83 மில்லி மீட்டரும், 2012-ம் ஆண்டில் 528.19 மில்லிமீட்டரும், 2013-ம் ஆண்டில் 489.10 மில்லி மீட்டரும், 2014-ம் ஆண்டில் 572.19 மில்லி மீட்டரும், 2015-ம் ஆண்டில் 820.52 மில்லி மீட்டரும், 2016-ம் ஆண்டில் 345.98 மில்லி மீட்டரும், 2017-ம் ஆண்டில் 740.59 மில்லி மீட்டரும், 2018-ம் ஆண்டில் 486.67 மில்லி மீட்டரும், 2019-ம் ஆண்டில் 597.91 மில்லிமீட்டரும், 2020-ம் ஆண்டில் 751.03 மில்லி மீட்டரும், 2021-ம் ஆண்டில் 934.56 மில்லி மீட்டரும், 2022-ம் ஆண்டில் 748.37 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

அதிகளவிலான மழை

அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 2011, 2015, 2017, 2020, 2021-, 2022-ம் ஆண்டுகளில் சராசரி மழையை விட அதிகளவு மழை பெய்துள்ளது. 2012, 2013, 2014, 2016, 2018, 2019-ம் ஆண்டுகளில் சராசரியை விட குறைவாக மழை பெய்துள்ளது. மழை சரியாக பெய்யாததால் இந்தாண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆண்டின் சராசரி மழை பெய்யும் போதுதான் விவசாய தேவைகளும், குடிநீர் தேவைகளும் மக்களுக்கு பூர்த்தியாகும். அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் சராசரி மழை அளவை விட அதிகளவிலான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை

கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் இதுநாள் வரை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 17.12 மில்லி மீட்டரும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 132.35 மில்லி மீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான செப்டம்பர் மாதம் 23-ந்தேதி வரை 221.25 மில்லிமீட்டரும் என இந்தாண்டு மொத்தம் 370.72 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழையை பொறுத்துதான், ஆண்டின் சராசரி மழை அளவினை எட்டுமா? என கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். ஆண்டின் சராசரி மழை அளவை பெற இனிவரும் காலங்களில் 281.48 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டியுள்ளது. இருந்தபோதிலும் கடந்த 3 ஆண்டுகளை போலவே இந்தாண்டும் கரூர் மாவட்டத்தில் சராசரி மழை அளவை தாண்டி அதிகளவிலான மழை பெய்ய வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story