அன்னதானம் வழங்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுரையை அமல்படுத்த வேண்டாம்-கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
சித்திரை திருவிழாவின் போது இந்த ஆண்டு அன்னதானம் வழங்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுரையை அமல்படுத்த வேண்டாம் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
மதுரை,
சித்திரை திருவிழாவின் போது இந்த ஆண்டு அன்னதானம் வழங்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுரையை அமல்படுத்த வேண்டாம் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
பதிவு செய்ய வேண்டும்
மதுரையைச் சேர்ந்த கனகேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் தற்போது சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின்போது பக்தர்களுக்கு பலவகையான சாதங்கள் மற்றும் அன்னதானம் செய்பவர்கள், பிரசாத உபயதாரர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. இச்சட்டத்தின் கீழ் தினசரி ரூ.3 ஆயிரத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்தான் இதற்காக பதிவு செய்து லைசென்சு பெற வேண்டும். எனவே சித்திரைத்திருவிழாவையொட்டி அன்னதானம், பிரசாதம் வழங்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்ததற்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
கால அவகாசம் வழங்க வேண்டும்
இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "பிற மத விழாக்களில் உணவு பரிமாற்றத்தின்போது இதுபோல நிபந்தனை விதிக்கப்பட்டதா? பல லட்சம் மக்கள் கூடும் இடத்தில் அன்னதானம் வழங்குவதை பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியப்படும்? என கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்தம் செய்ய இயலாது. எனவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.