போதைப்பொருள் நடமாட்டம்: சாப்ட் முதல்-அமைச்சர் என்று நினைக்க வேண்டாம்... சர்வாதிகாரியாக மாறுவேன் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், போதைப் பொருளை பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி நியமிக்கப்படுவார்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும். மதுவிலக்கில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். போதை பாதை அழிவு பாதை, அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள்.
போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என வலியுறுத்துங்கள். பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க போலீசார் உறுதியேற்க வேண்டும் என்றும் சோதனை சாவடிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பதை தடுக்க வேண்டும்.
போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும். காவல்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து போதை பாதையை அடைக்க வேண்டும். போதைப்பொருளை தடுக்க தென்மடலை ஐஜி அஸராகார்க் சிறப்பு செயல்படுவதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சமுதாயத்திற்கே சீரழிக்க கூடிய போதை பொருள் நடமாட்டத்திற்கு எந்தவிதத்திலும் துணை போக கூடாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இதை நான் விளையாட்டாக சொல்லவிலை என கூறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் சாப்ட்னா முதல்-அமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். இதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. என்டிபிஎஸ் சட்டத்தில் உள்ள 32 பி ஏ பிரிவை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தார்.