"செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்"
செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள் என்று கடலூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு நடிகர் தாமு அறிவுரை கூறினார்.
கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கல்வியில் காவல்துறை, போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் முதல் முறையாக 10, 11, 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் 28 அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிலரங்கிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கினார். பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், கூடுதல் கலெக்டர் மதுபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் திரைப்பட நகைக்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு, மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் கிங்காக இருப்பீர்கள்
ஆசிரியர்கள் எங்கும் மாணவர்களை விட்டுக்கொடுப்பதில்லை. மாணவர்களை திருத்தி தீபமாக மாற்றுகிறவர்கள் தான் ஆசிரியர். அரசு பணம் கொடுத்து, வாங்கி உங்களுக்கு இலவசமாக சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்குகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சினிமா நடிகர்கள் நிஜமான ஹீரோக் கள் அல்ல, உங்கள் தந்தை தான் நிஜமான ஹீரோ, சினிமா நடிகர்களின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள்.
அம்மா உங்களை கருவறையில் சுமந்தார், ஆசிரியர் உங்களை வகுப்பறையில் சுமக்கிறார். வாழ்க்கையில் சுமோக்கிங், டிரிங்கிங் ஆகிய 2 கிங்கை வெளியேற்றினால், நீங்கள் கிங்காக இருப்பீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றினால், வாழ்க்கையில் முன்னேற முடியாது.
செல்போன் பயன்படுத்தாதீர்கள்
கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 33-வது இடத்தில் உள்ளது. அதை நீங்கள் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் தான் உண்மையான சாம்பியன். இதை நீங்கள் உணர வேண்டும். போதையின் பாதையில் மாணவர்கள் சென்று விடக்கூடாது.
செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். அதில் நல்லதை மட்டு எடுத்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப், யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதில் இருந்து வெளியே வாருங்கள். ஏராளமான புத்தகங்களை படியுங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, சபியுல்லா, கடலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜி.ஆர். துரைராஜ், மண்டல தலைவர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார், கவிதா, மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.