சங்கரன்கோவில் அருகேமனைவி-குழந்தையை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சங்கரன்கோவில் அருகே மனைவி-குழந்தையை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சங்கரன்கோவில் அருகே மனைவி-குழந்தையை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நடத்தையில் சந்தேகம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் இடையன்குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவ்யா என்ற 6 மாத பெண் குழந்தையும் இருந்தது.
வெங்கடேசன் தனது மனைவி இசக்கியம்மாள் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
மனைவி-குழந்தை கொலை
கடந்த 6-7-2015 அன்று வீட்டில் குழந்தை திவ்யா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து வெங்கடேசன் தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்க சென்றார். அந்த சமயத்தில் குழந்தை அழுதது. இதனால் தனது உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக உள்ளது என்று நினைத்து வெங்கடேசன், குழந்ைதயை கடித்து காயப்படுத்தினார். இதை தடுக்க சென்ற மனைவி இசக்கியமாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் தொட்டிலில் இருந்த குழந்தை திவ்யாவை தூக்கிக் கொண்டு தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார்.
இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்கடேசனை கைது செய்து, நெல்லை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.