முட்டத்தில் இரட்டைக்கொலை: பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய், மகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


முட்டத்தில் இரட்டைக்கொலை:  பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய், மகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

பவுலின் மேரி

முட்டத்தில் கொலை செய்யப்பட்ட தாய், மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி முட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் துக்கம் அனுசரித்தனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

முட்டத்தில் கொலை செய்யப்பட்ட தாய், மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி முட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் துக்கம் அனுசரித்தனர்.

தாய், மகள் கொலை

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவா்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (90) உடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த பவுலின் மேரியும், திரேசம்மாளும் மர்ம நபர்களால் கொலை ெசய்யப்பட்டனர்.

நகைக்காக கொலை

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் 2 பெண்கள் மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து 2 பேரையும் பயங்கர ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்ததோடு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டைக்கொலை தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

பவுலின்மேரியின் கணவர் மற்றும் மகன் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களின் வருகைக்காக உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தனர். இதையடுத்து பிரேத பரிேசாதனைக்கு பின்பு நேற்று இரண்டு உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில் முட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இறுதி பிரார்த்தனை நடத்தப்பட்டு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த சம்பவத்தையொட்டி முட்டம் மீனவர் கிராமத்தில் உள்ள மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் துக்கம் அனுசரித்து வந்தனர். மேலும், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செல்போன் சிக்னல் அடிப்படையில் தீவிர விசாரணை ( மெயின் தலைப்பு)

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி (2-வது தலைப்பு)

முட்டத்தில் தாய், மகள் ெகாலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

முட்டத்தில் தாய், மகள் கொலை ெசய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற்ற செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் சிக்னல்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். வாடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story