நடத்தையில் சந்தேகம்:மனைவிக்கு அரிவாள் வெட்டு -தொழிலாளி கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுகுடித்துவிட்டு தகராறு
பொள்ளாச்சி அருகே உள்ள சென்னியூரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 27). இவரது மனைவி கனகேஸ்வரி (25). கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கனகேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பேச்சிமுத்து கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி பேச்சிமுத்து மதுகுடித்து விட்டு தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பேச்சிமுத்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து கனகேஸ்வரியை வெட்டியதாக தெரிகிறது.
கைது
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் பேச்சிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.