தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Oct 2022 7:21 AM GMT (Updated: 9 Oct 2022 7:22 AM GMT)

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடியாததால் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் பல்வேறு பிரிவுகளாக சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத்தடுப்பு கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டும் என்று இந்த பணிகளை நேற்று ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

எந்த இடத்திலும் மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவடையவில்லை. ஆங்காங்கே துண்டு துண்டாகத் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை இணைக்கப்படாவிட்டால், எந்த இடத்திலும் மழைநீர் வடியாது. அத்தகைய சூழலில் கடந்த ஆண்டை மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும். இதை உணர்ந்து கொண்டு எங்கெல்லாம் வடிகால்களை இணைக்க முடியுமோ, அந்த பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம்.

எங்கெல்லாம் அதிக தூரத்திற்கு கால்வாய் வெட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் வெளியேற வகைசெய்ய வேண்டும். அதேபோல், புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் தங்கு தடையின்றி வெள்ள நீர் வெளியேறுவதை சோதனைகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story