பசி குறியீடு பட்டியலில் முன்னுக்கு வர முயற்சிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பசி குறியீடு பட்டியலில் முன்னுக்கு வர முயற்சிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

2022-ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2022-ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின் தங்கியிருப்பது கவலை அளிக்கிறது.

2000-ல் இந்த பட்டியல் வெளியிடத் தொடங்கியது முதல் இப்போது வரையிலான 23 ஆண்டுகளில் 2020-ம் ஆண்டை தவிர மற்ற 22 ஆண்டுகளில் இந்தியா 100-வது இடத்திற்கு கீழ் தான் உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க இந்தியா முயலவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை விட நுண்ணூட்டச் சத்து குறைபாடு, குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதனால் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துக்குறைவு, வளர்ச்சி இல்லாமை ஆகியவற்றுக்கு வறுமை தான் முக்கியக் காரணம். இவை தவிர மற்ற காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story