வரையாடுகள் கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்
வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மண்டல வனப்பாதுகாவலர் தலைமையில் நடந்தது.
கோவை
வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மண்டல வனப்பாதுகாவலர் தலைமையில் நடந்தது.
நீலகிரி வரையாடு திட்டம்
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு அழிவின் விழும்பில் உள்ளது. இதனால் இந்த இனத்தை பாதுகாக்க, நீலகிரி வரையாடு திட்டத்தை, பல்வேறு உத்திகள் வழியே செயல்படுத்த, அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி வரையாடுகளை கணக்கெடுத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அதற்கான உணவு தேவைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவையில் உள்ள மாவட்ட வன அதிகாரி அலுவலகம் அருகே இந்த திட்டத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நீலகிரி வரையாடு திட்டத்தில் திட்ட இயக்குனர், ஒரு விஞ்ஞானி, 4 முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் வரையாடுகளை கணக்கெடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. நீலகிரி வரையாடு திட்டத்தின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும், கோவை மண்டல வனபாதுகாவலருமான ராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
இதில் இந்த திட்டத்தில் உள்ள முதுநிலை விஞ்ஞானி எஸ்.பிரியங்கா, முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் பி.சுப்பையன், என்.ராஜேஸ்குமார், கே.மணிகண்டன், எஸ்.கோகுல் பிரசாத், டபிள்யூ. டபிள்யூ. எப். பூமிநாதன் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டிரோன் பயன்பாடு
இந்த கூட்டத்தில் வரையாடுகளை எப்படி கணக்கெடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை, களக்காடு முண்டந்துறை ஆகிய 4 புலிகள் காப்பகம், கோவை சின்னாட்டு, பெரியாட்டு மலை, ஊட்டி ஆகிய பகுதிகளில் வரையாடுகள் உள்ளன.
அதுபோன்று நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் வரையாடுகள் இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் வரையாடுகளை கணக்கெடுப்பது, இந்த கணக்கெடுப்புக்கு டிரோன் பயன்படுத்துவது, அதை 100 அடி உயரத்தில் பறக்கவிட்டு மிக தெளிவான முறையில் கணக்கெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கேரளாவை சேர்ந்த மாவட்ட வன அதிகாரிகள், ஓய்வு பெற்ற வன உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.