குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்


குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
x

கொள்ளிடம் அருகே குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தடி நீர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியில் தில்லைவிடங்கன் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு தொடர்ந்து முக்கிய ஆதாரமாக இருந்து வருவது நிலத்தடி நீராகும்.

நிலத்தடி நீரை சமையல் செய்வதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் ஓரளவுக்கு வந்தாலும் நிலத்தடி நீர் இங்குள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கி வருகிறது.

பெரியகுளம்

இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பெரிதும் பாதுகாக்கும் வகையில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியகுளம் என்ற பொதுக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் கிராம மக்களுக்கு குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பயன்பட்டு வந்தது.

இந்த குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் தண்ணீரே தெரியாதப்படி வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் வயல்களில் தேங்கும் தண்ணீர் வெளியேற முடியாமல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும்.

தூர்வார வேண்டும்

ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் பெரியகுளத்தை தூர்வாரி ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story